“துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு இந்து என கூறினாரா ஜவஹர்லால் நேரு” - வைரலாகும் பொய்ச் செய்தி | உண்மை என்ன?
This news Fact Checked by ‘Vishvas News’
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “ தான் கல்வியால் ஒரு கிறிஸ்தவர், கலாச்சாரத்தால் முஸ்லீம், துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்து” என்று கூறியதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது. இது தொடர்பான உண்மை சரிபார்ப்பு குறித்து விரிவாக காணலாம்
சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு பற்றி அவ்வபோது பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதுண்டு. அந்த வகையில் அவர் பற்றிய ஒரு பதிவு ஒன்று சமீபத்தில் வைரலானது. அப்பதிவில் “கல்வியால் நான் ஒரு கிறிஸ்தவர், கலாச்சாரத்தால் முஸ்லீம் மற்றும் துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு இந்து” என்று அவர் கூறியதாக சில ஆவணங்களுடன் அவை பரவியது. சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல்களை விஸ்வாஸ் நியூஸ் உண்மைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தியது.
ஜாகோ ஹிந்துஸ்தானி எனும் பேஸ்புக் பயனர் பெயரில் நவம்பர் 11, 2024 அன்று ஒரு இடுகையைப் பகிரப்பட்டு “நான் கல்வியால் கிறிஸ்தவன், கலாச்சாரத்தால் முஸ்லீம், துரதிர்ஷ்டத்தால் இந்து. – ஜவஹர்லால் நேரு” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைச் சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய பதிவின் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுள் தேடுதலுக்கு உட்படுத்தியபோது டெக்கான் க்ரோனிக்கிள் செய்தித்தாளின் ஹைதராபாத் பதிப்பின் நகல் ஒன்று கிடைத்தது. நவம்பர் 18, 2018 அன்று ஜவஹர்லால் நேருவை பற்றிய சிறப்பு கட்டுரையில் நேருவின் கருத்தை தவறாக பதிவிட்டதற்காக அதனை வாபஸ் பெற்று, நவம்பர் 25, 2018 அன்று ஒரு திருத்தத்தை வெளியிட்டது, அதில் “நான்... துரதிர்ஷ்டவசமாக பிறப்பால் ஒரு இந்து” என்று நேரு சொன்னதாக மேற்கோள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1959 இல் இந்து மகாசபா தலைவர் என்.பி. காரே செய்த தவறான குற்றச்சாட்டு. இது நேரு சொன்னவை அல்ல. தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். “ என குறிப்பிட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக கூடுதலாக ஆராய்ச்சி மேற்கொண்டதில் வரலாற்றாசிரியர் பால் ராம் நந்தாவின் 'நேரு: மோதிலால் மற்றும் ஜவஹர்லால்' என்ற புத்தகத்தில் வைரலான அறிக்கையின் குறிப்பைக் கண்டோம். நந்தாவின் கூற்றுப்படி, இந்து மகாசபா தலைவர் என்.பி.காரே நேருவை இவ்வாறு விவரித்துள்ளார்.
இதேபோல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சசி தரூரின் 'நேரு: தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா' புத்தகத்திலும் இந்த அறிக்கையை நாங்கள் கண்டோம், அதில் நேருவின் புகழைக் கெடுக்கும் முயற்சியில் காரே இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல நேருவைப் பற்றி 'நேரு மிதக் அவுர் சத்யா' என்ற புத்தகத்தை எழுதிய மூத்த பத்திரிகையாளர் பியூஷ் பாபேலின் கூற்றிலிருந்து , “இந்த அறிக்கை ஜவஹர்லால் நேருவால் கூறப்படவில்லை. என்.பி. காரேயின் கருத்து நேருவின் கருத்து என பொய்யாகக் காட்டப்படுகிறது” என விளக்கம் அளித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும் நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகத்தின் முன்னாள் இயக்குநருமான மிருதுளா முகர்ஜியையும் தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை திட்டவட்டமாக மறுத்த அவ்ர் "இது என்.பி. காரே சொன்னது." என தெளிவுபடுத்தியுள்ளார்.
முடிவு: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் “கல்வியால் கிறிஸ்தவர், கலாச்சாரத்தால் முஸ்லீம், துரதிர்ஷ்டத்தால் இந்து” என்று கூறப்படும் வைரலான கூற்று தவறானது என்றும் நேருவைப் பற்றி ஹிந்து மகாசபா தலைவர் என்.பி.காரே கூறிய கருத்தை தவறாக பரப்பப்பட்டுள்ளது என்றும் உண்மை சரிபார்ப்பில் உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.