Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வேலையில்லா திண்டாட்டம்... மத்திய அரசு திணறி வருகிறது” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருவதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
04:18 PM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டதொடர் என்பதால்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நடைபெற்றது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

Advertisement

“குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை. புதிதாக ஒன்றும் இல்லை, குடியரசுத் தலைவர் உரை என்பது இப்படி இருக்கக் கூடாது. நடந்ததையே திரும்பச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சனை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ அல்லது இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

பிரதமர் முன்மொழிந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டம் நல்ல யோசனை என்று நினைக்கிறேன். அதன் விளைவு உங்கள் முன்பு உள்ளது. கடந்த 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3% ஆக இருந்த உற்பத்தி, இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.6% ஆகக் குறைந்துள்ளது. இது 60 ஆண்டுகளில் உற்பத்தியின் மிகக் குறைந்த பங்காகும்.

நான் பிரதமரைக் குறை கூறவில்லை, அவர் முயற்சிக்கவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. அவர் முயற்சி செய்தார், ஆனால் அவர் தோல்வியடைந்தார்.  உற்பத்தித் துறை சரியான அளவில் ஊக்குவிக்கப்படவில்லை.உற்பத்தி துறையில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன.

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. செல்போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் அசம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தியாவில் நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது.

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், பிரதமரின் கூற்றை ஏற்காத ராணுவம், 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறுகிறது. நாம் ஒரு உறுதியான உள்நாட்டு உற்பத்தி திறனை வலுப்படுத்தி இருந்தால் 'அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவுக்கு எங்கள் பிரதமரை அழையுங்கள்' என கோரி வெளியுறவு அமைச்சரை நாம் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய தேவை வராது"

இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Congressdraupadi murmumodiparlimentragul gandhi
Advertisement
Next Article