“எதற்காகவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கக் கூடாது” - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில் இருந்தும் பதிவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்தின் நிறைவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
உலகெங்கிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பல்வேறு துறைகளின் தலைமை பொறுப்புகளிலும், ஆராய்ச்சி பொறுப்புகளிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் நமது தாய் தமிழ்நாட்டிற்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகவும், அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களின் தேவையையும், அறிவையையும் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் “தமிழ் டேலண்ட் பிளான்” என்ற திட்டம் வகுக்கப்படுகிறது. அதன்மூலம் அயல்நாட்டில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் பங்களிப்பு நமது கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்படுதலை மேம்படுத்த வேண்டும்.
இதற்கான முன் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்ல தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு கொள்கைகளில் நடைபெற்று வரும் மாற்றங்கள் காரணமாக அந்த நாட்டில் உள்ள நம் மாநிலத்தைச் சேர்ந்த அறிவு சார்ந்த அறிவியல் அறிஞர்கள் தாய்நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் அவரது திறமைகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணிகளிலும், உயர்கல்வி அமைப்பையும் உலக தரத்தில் கொண்டுவர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துக்களும், கல்வி மட்டுமே போதிக்க பட வேண்டும்.
எந்த காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக்கூடாது. கல்வியே அடிப்படையே அறிவை செம்மைப்படுத்துவதற்காகதான். அறிவியல் ரீதியான உண்மைகளையும், உயர்ந்த மானுட பண்புகளை போதிப்பதுடன், மாணவர்களுடைய சமத்துவத்தையும், சமூக சமநீதியையும் கற்பிப்பது தான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
பிரிவினையை தூண்டக்கூடிய கருத்துகளுக்கோ, நடவடிக்கைக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எந்தவித சமரசங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை மனதில் வைத்து உங்கள் கடமையை நிறைவேற்றி தாருங்கள்” எனப் பேசினார்.