ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு முனினிலை! நிதி ஆயோக் ஆய்வறிக்கை!
ஐ.நா. நிர்ணயித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சி குறியீடாக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணியத்துள்ளது. இதில் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை மற்றும் 16 இலக்குகளுக்கான புள்ளிகள் பட்டியலை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 100-க்கு 74 புள்ளிகளை பெற்றிருந்த தமிழ்நாடு, தற்போது 78 புள்ளிகளை பெற்று முன்னோடி மாநிலம் என்ற அந்தஸ்தையும் தக்க வைத்துள்ளது.
அதிலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள 16 இலக்குகளில், பதினொன்றில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிகம் பெற்றுள்ளது. குறிப்பாக, வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம், மலிவான விலையில் மின்சக்தி, கவுரவமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், கண்டுபிடிப்பு மற்றும் உட்கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வை களைதல், காலநிலை மாற்ற நடவடிக்கை, அமைதி மற்றும் நீதிக்கான செயல்பாடுகள் ஆகிய 11-ல் தேசிய சராசரியை விட தமிழ்நாடு அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
மேலும், 2 இலக்குகளில் தேசிய சராசரியுடன் சரிசமமான அளவில் தமிழ்நாடு இருப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. வறுமை குறியீட்டை பொறுத்தவரை, தேசிய சராசரி 14 புள்ளி 96 சதவிகதிமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 புள்ளி 2 விழுக்காடு மட்டுமே வறுமை உள்ளதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
உயர் கல்வி சேரும் மாணவர்களின் வீதம்,தேசிய அளவில் 28 புள்ளி 4 விழுக்காடாக உள்ள நிலையில், தமிழ்நாடு 47 சதவிகிதம் பெற்றுள்ளது.
இதே போன்று தமிழ்நாட்டில் பிரசவ நேர மரணம் தேசிய சராசரியை விட குறைந்த அளவில் நிகழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ளவர்களுக்கு தூய்மையான குடிநீர், வேலைவாய்ப்பு, வீட்டில் ஒருவருக்கு செல்போன் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், சாலை விபத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் ஒரு லட்சம் பேருக்கு 23 பேர் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது.