பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி!
காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது.
இந்த தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு உதம்பூர், ஜம்மு மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளும், தேசிய மாநாட்டு கட்சிக்கு அனந்த்நாக், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேசிய மாநாட்டு கட்சி இன்று அறிவித்தது.
அந்த வகையில், ஸ்ரீநகரில் ஷியா தலைவர் அகா ரூஹுல்லாவும், பாரமுல்லா தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லாவும் போட்டியிடுவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்தார். மேலும் அனந்த்நாக் தொகுதியில் குஜ்ஜார் தலைவர் மியான் அல்தாப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.