#Ukraine_RussiaWar | 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா - உக்ரைன்!
ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
போரை கைவிட பல நாடுகள் வலியுறுத்தியும் போர் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரஷ்யா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்தது.
இது குறித்து ரண்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷ்ய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா்" என்று தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.