Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“யு.ஜி.சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” - அமைச்சர் கோவி.செழியன்!

“யு.ஜி.சியின் தொடர் செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
06:08 PM Jan 28, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் UGC வரைவறிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

கல்வியில் மாநில அரசுக்கு முழு உரிமையும் உண்டு. மாநில உரிமைகளை பறிப்பதாக யுஜிசியின் புதிய நெறிமுறைகள் அமைந்துள்ளது. மாணவர்களின் கல்வி முறையை மேம்படுத்தத்தான் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களை கைப்பற்றும் விதமாக யுஜிசி தேர்வு அமைந்துள்ளது.

சர்வாதிகாரப் போக்கோடு பல்கலைக்கழகங்கள் மீது திணிக்கக் கூடிய கருத்தைதான் யுஜிசி கொள்கை வெளியிட்டுள்ளது. யுஜிசி பொறுத்தவரை மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அதனை மீறி உள்ளது. யுஜிசி என்பது கண்டிக்க வேண்டிய ஒன்று.

கல்விப் பணி சாராத மற்றவர்களை, பொதுத்துறையை சார்ந்தவர்களை கூட துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்பது கல்வியாளர்களுக்கு போட்ட ஒரு முட்டுக்கட்டை. கல்வி என்பது ஒரு பொதுத்துறையை நடத்துவது போல இல்லை. தொடர்ந்து கல்வி பணிகளை ஆற்றி வருபவர்களை துணைவேந்தர்களாக நியமித்தால் தான் சிறப்பாக அமையும்.

கல்லூரியில் இளங்கலை என்றால் மூன்று ஆண்டுகள், முதுகலை என்றால் இரண்டு ஆண்டுகள் என்று இருக்கிறது. அதனை மாற்றி முதலாம் ஆண்டு வெளியேறலாம், இரண்டாம் வெளியேறலாம் என்பது கல்வியில் இடைநிற்றலை ஏற்படுத்தும்.

தொழில் கல்வியிலிருந்து பொதுக் கல்விக்கும், பொதுக் கல்வியிலிருந்து தொழில் கல்விக்கும் இடம்பெயர்தல் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அது பல இடர்பாடுகளை உருவாக்கும். தொழில் கல்வி என்பதன் பாடத்திட்டம் வேறு, பொதுக் கல்வி பாடத்திட்டம் வேறு.

9 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பச்சையப்பன் கல்லூரியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். நடவடிக்கைகள் எடுப்போம். ஆளுநருக்கு என்று சில வரைமுறைகள் உள்ளது. அவர் உயர்கல்வியில் தலையிடுகிறார். ஆளுநருடைய நெறிமுறைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அதைத்தாண்டி கல்வித்துறையை சீரழிக்க நினைத்தால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். துணை வேந்தர் நியமனத்தில் இதுவரை உள்ள நடைமுறைகள் சரிதான்.

யுஜிசி வரைவு நெறிமுறைகளை தமிழ்நாடு போல் கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் எதிர்த்துள்ளன. யுஜிசியின் புதிய நெறிமுறைகளை திரும்பபெறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

உயர் நிலையிலுள்ள உயர்கல்வியை சீர்குலைக்கும் முயற்சி இது. நாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் பட்டங்கள் கிடையாது, கூட்டங்களில் கலந்துக் கொள்ளமுடியாது. இவையெல்லாம் சர்வாதிகார போக்கினை காட்டுகிறது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் செய்கிறார்கள். அதிகார வரம்பினை மீறியுள்ளார்கள்.

இதனுடைய தொடர் செயல்பாடுகளை பார்க்கும் போது யு.ஜி.சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. கல்விப்பணி சாராதவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்பது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

Tags :
GovernorGovi ChezhiaanUGCUniversities
Advertisement
Next Article