For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உதயநிதி ஸ்டாலினும்… அதிர்வை ஏற்படுத்திய பிரச்சாரங்களும்!

11:20 PM Sep 28, 2024 IST | Web Editor
உதயநிதி ஸ்டாலினும்… அதிர்வை ஏற்படுத்திய பிரச்சாரங்களும்
Advertisement

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக அவர் பொறுப்பேற்றது முதல் அவர் மேற்கொண்ட பல பிரசாரங்கள் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதுகுறித்து விரிவாக காணலாம்.

Advertisement

அரசியல் பிரவேசம் :

அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை கண்டித்து திமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. தாம்பரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற உதயநிதி “ திமுகவின் கடைசித் தொண்டனாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனக் கூறினார். இதன் பிறகு அவருக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2019 மக்களவைத் தேர்தல் :

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சூறாவளி பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அடுக்கு மொழியில் அல்லாமல், எளிமையான முறையில் , அண்ணே, அக்கா என உரிமையோடு தொண்டர்களிடம் அவர் பேசியது பெரிதும் பயன் அளித்தது. அத்தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2021 சட்டமன்றத் தேர்தல் - எய்ம்ஸ் பிரசாரம்

இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலின் போதும், இந்த பாணியையே கடைப்பிடித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் தமிழ்நாட்டில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிருந்தது. தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக தேர்தல் பரப்புரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் முதல் நாளே திருவாரூரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் விடுதலையானதும் மீண்டும் பரப்புரைக் களம் சூடுபிடித்தது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக உறுதி அளித்துவிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் கட்டவில்லை என கேள்வி எழுப்பினார். குறிப்பாக சென்ற இடமெல்லாம், எய்ம்ஸ் என எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை உயர்த்தி காட்டிய போது, அதிமுக, பாஜக கட்சிகளின் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தது போலிருந்தது.

செல்லாத 1000 ரூபாய் நோட்டுடன் பிரசாரம்

அதேபோல பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை கையோடு எடுத்துச் சென்று, பொதுவெளியில் உயர்த்திக் காட்டி அதிமுக, மற்றும் பாஜகவிற்கு எதிராக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 2021 தேர்தலில் திமுக தனித்து 133 இடங்களில் வெற்றி பெற்றதற்கு உதயநிதி ஸ்டாலினின் பங்கு அளப்பரியது.

2024 மக்களவைத் தேர்தல் :

2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரசாரத்திற்கு முக்கிய அச்சாணியாக விளங்கியவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. அமெரிக்க பாணியிலான பிரச்சார உத்தியை கையாள்வதாக சொல்லப்பட்டது. அதாவது உதயநிதியின் பேச்சை கேட்கும் ஒவ்வொருவரும் தன்னை நோக்கித் தான் பேசுகிறார் என நினைக்கும் அளவுக்கு பிரசாரத்தை அவர் கூர்மைப்படுத்தினார்.

சப்பாத்தி..

ஒரு பிரசாரத்தில்” அண்ணா.. மோடியிடம் நீங்கள் சென்றால் அவர் என்ன தருவார்.. ஒரு சப்பாத்தி தருவார்.., அதனை நாம் சாப்பிடப் போவதில்லை.., நான்கு இந்தி புத்தகங்களை தருவார்..அது நமக்கு வாசிக்க முடியாது” என பேசியது மக்களை மேலும் கவர்ந்திழுத்தது.

29 பைசா..

பிரதமரை பிரதமர் என இனிமேல் அழைக்கப் போவதில்லை. இனிமேல் 29 பைசா என்று தான் அழைக்கப் போகிறேன். ஏனெனில் நாம் செலுத்தும் 1 ரூபாய் ஜிஎஸ்டியில் நமக்கு வெறும் 29 பைசாவைத் தான் அவர் திரும்பத் தருகிறார் என உதயநிதி பேசியது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

நீட்டுக்கு எதிராக முட்டை பிரசாரம்

நீட் முதுகலை படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் சதவீதமாகக் குறைத்த மத்திய அரசைக் கண்டித்து ‘நீட்’ என்று எழுதப்பட்ட முட்டையைக் காண்பித்து பிரசாரம் செய்தார். இது பாஜகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தேசிய அளவில் கவனம் ஈர்த்த சனாதன தர்ம பிரசாரம்

சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்காக உதயநிதி ஸ்டாலினின் மீது தேசிய அளவில் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.

மேலும் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் முக்கிய பேசு பொருளாக இருந்தது. . உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரங்கள் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் ஈர்த்தன.

Tags :
Advertisement