For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசியல் பேசிய உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள்….

11:19 PM Sep 28, 2024 IST | Web Editor
அரசியல் பேசிய உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்கள்…
Advertisement

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சினிமாவில் தயாரிப்பாளராக தொடங்கி, விநியோகஸ்தர், நடிகர் என பல பரிணாமங்கள் எடுத்த அவர் அரசியலிலும் கால் பதித்தார். தற்போது சட்டமன்ற உறுப்பினரில் தொடங்கி துணை முதலமைச்சர் வரை உயர்ந்துள்ளார். அவர் நடித்து வெளியான படங்களில் பேசப்பட்ட அரசியல் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

கண்ணே கலைமானே:

விவசாயக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தன் சொந்த ஊரான மதுரை அருகே சோழவந்தானில் மண்புழு உரத் தொழிற்சாலை நடத்தி வரும் கமலக்கண்ணன் எனும் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். இயற்கை விவசாயம் மீது பெருவிருப்பம் கொண்ட அவர், அன்றாட வாழ்க்கையை நகர்த்த சிரமப்படும் ஊர்க்காரர்களுக்கு கிராம வங்கியில் கால்நடை வளர்ப்புக்காக கடன் வாங்கிக் கொடுத்து, அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வார். மேலும் மருத்துவ மாணவிக்கு கல்விக் கடன் வாங்கித் தருவது என கிராமத்தில் ஒரு சமூக பொறுப்புள்ள இளைஞனாக நடித்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

விளைநிலத்தை மலடாக்கும் செயற்கை உரம், திறமையான மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைக்கும் ‘நீட்’ தேர்வு பிரச்னை, விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கும் வங்கிக் கடன் சுமைகள், பயன் தரும் இயற்கை விவசாயம் என மக்கள் நலன் சார்ந்த அரசியல் என இப்படம் பேசியது.

கலகத் தலைவன்:

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் கலகத் தலைவன். கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவராக திருமாறன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். எளிய மக்களின் நிலங்களை அபகரித்து, அரசியல் அதிகாரங்களுடன் இணைந்து சுற்றுச் சூழலைஅழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வில்லன்கள் என படம் அழுத்தமாக பேசியது. ‘நீங்க ஓட்டுக்கு காசு கொடுக்கறது பத்திதான் பேசுறீங்க, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு கேட்டிருக்கீங்களா?’ என்பது போன்ற வசனங்கள் கவனிக்க வைத்தன.

மனிதன்:

பொள்ளாச்சியில் சட்டம் படித்துவிட்டு தனது திறமையை நிரூபிக்க சென்னை வரும் வழக்கறிஞராக உதயநிதி ஸ்டாலின் சக்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நள்ளிரவில் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓட்டி வரும் பெரிய கோடீஸ்வரனின் வாரிசு, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி 6 பேரைக் கொன்று விடுகிறார். கோடீஸ்வரர்களின் வாரிசுக்கு மூத்த வழக்கறிஞரான பிரகாஷ் ராஜ் விடுதலை பெற்றுக் கொடுக்கிறார்.

இந்த விடுதலையை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் பொதுநல வழக்கு தொடர்கிறார். சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக வாதாடும் அவர் புலனாய்வுத் திறமையால் வழக்கில் வென்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகிறார். “நீதி தேவதை கண்ணைக் கட்டியிருக்கலாம். ஆனால் நீதிபதி கண்களைத் திறந்துதான் வைத்திருக்கிறார்” போன்ற வசனங்களை மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

நெஞ்சுக்கு நீதி:

காவல் உதவி கண்காணிப்பாளராக விஜயராகவன் எனும் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம். அவரது பணி எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த 2 மாணவிகளின் சடலங்கள் தூக்கில் தொங்கி நிலையில் கிடக்க அங்கு சாதிய வன்மமும், ஒடுக்குமுறையும் புரையோடிக் கிடப்பதைக் காண்கிறார். மாணவிகள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து, குற்றவாளிகளை பிடிக்க விசாரணையை நேர்மையாக நடத்துகிறார்.

திருப்பூரில் ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு காரணமாக சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், வேல் யாத்திரை போன்ற தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இப்படத்தில் பேசியுள்ளனர்.

'எல்லாரும் சமம்னா யார் ராஜா? சமம்னு நெனைக்கிறவன் தான் ராஜா', 'நடுவுல நிக்கிறது இல்ல சார் நடுநிலை; நியாயத்தின் பக்கம் நிக்குறது தான் நடுநிலை', 'ஒருத்தன் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் சாதியில இல்ல குணத்துல இருக்கு', போன்ற அரசியல் வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

மாமன்னன்:

தனித் தொகுதி எம்.எல்.ஏ மாமன்னன் எனும் கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவரது மகனான அதிவீரன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளனர். சமூக நீதியின் பெயரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் சாதி ஏற்றதாழ்வுகளையும் வாக்கு வங்கி அரசியல் சமரசங்களையும் இப்படம் பேசுகிறது.

'அதிகாரத்திற்கு வந்தால் மட்டும், இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மாறிவிடுறதா? சரிசமமாக உட்கார கூட அனுமதிக்காத சமூகம் இன்னும் உள்ளது என்பதை மிக அழுத்தமாக விவரித்தது இப்படம். " ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்." என சமூகநீதி பேசும் வசனங்கள் படம் முழுக்க இடம்பெற்றுள்ளன.

புத்தருக்கான குறியீடுகள், விலங்குகளை வைத்துச் சொல்லப்படும் உருவகங்கள், பன்றிக்குட்டி ஓவியங்கள், அம்பேத்கர், பெரியார் என படம் முழுக்க குறியீடுகள் நிரம்பியிருக்கும்.

குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்களில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படங்கள் பேசிய அரசியல் காலத்தால் அழியாதவை….

Tags :
Advertisement