“என்னை நாடு முழுவதும் தெரிய வைத்தவர் மோடி” | அமைச்சர் #Udhayanidhi பேச்சு!
“தமிழ்நாட்டிற்கு மட்டும் தெரிந்த உதயநிதியை, இந்தியா முழுவதும் கொண்டு சென்றவர்பிரதமர் மோடிதான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆழி பதிப்பகம் பதிப்பித்துள்ள, தேர்தல் 2024 - மீளும் மக்கள் ஆட்சி என்னும்
கட்டுரை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விசிக துணை பொதுச்செயலர் ஆளூர் ஷா நவாஸ், அரசியல்
செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அரசியல் செயல்பாட்டாளர்
தீஸ்தா செதல்வாட் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
“நானும் ஒரு பதிப்பாளர் தான். முரசொலியில் கடைசி பக்கத்தில் வரும் கட்டுரைகளை
தொகுத்து வெளியிட, இரண்டு வருடங்களாக முத்தமிழறிஞர் பதிப்பகம் நடத்தி
வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் 22 நாள்கள், 9000 கிலோமீட்டர் பயணம் செய்து, 125 பிரச்சாரக்
கூட்டங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுள்ளேன். மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சர் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு மகளிர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அதேபோல், பாசிஸ்டுகளுக்கு எதிரான மனநிலை உள்ளது. ஒரே நாடு, ஒரே மதம் என்று
சொல்லக்கூடிய பாஜகவின் பிறப்பு பிரச்சாரம், மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கு
இவற்றிற்கு எதிரான மக்களின் கோபத்தை பிரச்சாரக் களத்தில் நான் பார்த்தேன். தேர்தலுக்குப் பிறகு மோடியின் நடை, உடை, பாவனை மாறி உள்ளது. ஆனால் அவரது பாசிச சிந்தனைகள் மாறவே இல்லை. அதை மாற்றவும் முடியாது. தேர்தலில் பின்னடைவை சந்தித்தபோதும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதை ஒருபோதும் ஏற்க
மாட்டோம் என்று முதலமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அளவில்லாத அதிகாரத்தை
அடைய நினைத்த மோடிக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டி உள்ளது. இந்திய கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்ததும் பயந்துவிட்டார்கள். இந்தியாவின் பெயரையே மாற்ற எண்ணினார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, மோடி தோற்கடிக்கப்பட முடியாதவர் என்ற பிம்பம்
உருவாக்கப்பட்டது. கலர் கலராக ரீல் விட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு தேவையான
இடத்தை கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேசம்! என இன்று ஒரு காணொளியின் தலைப்பு உள்ளது.
இன்னும் துணை முதல் அமைச்சர் தொடர்பான அறிவிப்பு வரவில்லை. அதற்கான முழு
உரிமையும் முதலமைச்சரிடம் தான் உள்ளது. முதலமைச்சரிடமும் இது குறித்து
கேட்கிறார்கள். ரோட்டில் சென்று வருபவர்கள் எல்லோரிடமும் இது குறித்து கருத்து கேட்கிறார்கள். என்னிடம் கேட்டீர்கள் சரி. அவர் பாவம். படத்திற்கு படப்பிடிப்பிற்காக விமான
நிலையம் செல்கிறார். ஆனால் சொல்லிவிட்டார் என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்க
வேண்டாம் என்று. ஆனால் அவர்கள் வைத்துள்ள தலைப்பை படித்தால் என்ன
நினைப்பார்கள். இன்னைக்கு இதற்கு என்ன தலைப்பு வைக்கப் போகீறீர்கள் என தெரியவில்லை. உதயநிதி சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி என்று தலைப்பு வைத்தாலும் வைப்பீர்கள்.
மிஸ்டு கால் கொடுத்தாலே பாஜகவில் சேரலாம், என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால்
பாசிச பாஜக இன்று சொந்த காலில் நிற்க முடியாமல் சந்திரபாபு நாயுடு மற்றும்
நிதீஷ்குமார் காலை பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த பல்வேறு கட்சிகளை பாஜக அழித்துள்ளது. அதில் முதலிடத்தில் உள்ள கட்சி அதிமுக தான். இப்படிப்பட்ட ஒரு பாவப்பட்ட நிலைக்கு நம்முடைய எதிர்க்கட்சி தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் ஆசை.
தமிழ்நாட்டிற்கு மட்டும் தெரிந்த உதயநிதியை, இந்தியா முழுவதும் கொண்டு சென்றவர்
பிரதமர் மோடி தான். தமிழகத்தில் ரோட் ஷோ நடத்திய பாஜகவை, மக்கள் நடுரோட்டில் நிற்க விட்டார்கள்.