#U19 Mens Asia Cup - தொடர்ந்து 2வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது வங்கதேச அணி!
ஆண்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வங்கதேச அணி வெற்றிப் பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பங்ளாதேஷ் அணிகள் இடையே துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 198 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில், யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் 35.2 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றது. வங்கதேச அணியில் அஜிசுல் ஹகிம் தமிம், எம்டி இக்பால் ஹசன் இமான் தலா 3 விக்கெட்டுகளும் அல் ஃபஹத் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.