கெய்மி சூறாவளி - தைவானில் மூழ்கிய 2 கப்பல்கள்.. 10 பேர் மாயம்!
தாய்வானில் ஏற்பட்டுள்ள கெய்மி சூறாவளி காரணமாக 2 சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
தைவான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று அதிதீவிரமாக தெற்கு சீனாவை நோக்கி வீசியபோது, இந்த புயலால் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் தன்சானிய கொடியுடன் பயணித்த கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த 9 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தைவானின் தேசிய தீயணைப்பு அமைப்பின் தலைவர் ஹ்சியாவோ ஹுவான்-சாங் கூறுகையில், " மாலுமிகள் லைஃப் ஜாக்கெட்டுகளுடன் கடலில் விழுந்து மிதந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவ மற்றொரு சரக்கு கப்பல் அந்தப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால். காற்று பலமாக இருந்ததால் காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. வானிலை அனுமதிக்கும் போது, நாங்கள் உடனடியாக கப்பல்கள் அல்லது ஹெலிகாப்டர்களை அனுப்பி வைப்போம். ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. தைவானில் கெய்மி புயல் மணிக்கு 190 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடந்த பிறகு கப்பல் மூழ்கிய செய்தி வந்தது" என்றார்.
இதேவேளை, பிலிப்பைன்ஸின் கொடியுடன் பயணித்த எம்.டி.நோவா என்ற கப்பலும் கடலில் மூழ்கியுள்ளதுடன் அதில் பயணித்த 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தைவான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் அந்த கப்பலில் பயணித்த ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பயணிகள் தொடர்வதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தைவானை தாக்கியுள்ள கெய்மி சூறாவளி காரணமாக இதுவரையில் மூவர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.