பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல் - 25 பேர் உயிரிழப்பு!
ஆசியாவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டை கொமெ என்ற புயல் தாக்கியது. குறிப்பாக, அந்நாட்டின் பங்கசினான் மாகாணம் அக்னோ நகர் புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் சூறாவளி காற்றுடன், கனமழையும் கொட்டித் தீர்த்துள்ளது. கொமெ என்ற புயல் காரணமாக மணிக்கு 120 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இதனிடையே கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புயலால் கனமழை, வெள்ளம், நிலநிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை மையம், நிவாரணப் பொருட்கள், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொது சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இடம்பெயர்த்த மக்களுக்கு தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பல இடங்களில் உணவுப் பற்றாக்குறை, சுகாதார வசதி பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1-2 நாட்கள் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.