இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஆம்புலன்ஸ் வராததால் இரண்டு பேர் உயிரிழப்பு!
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு நெடுங்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ், பிரகாஷ், அருண்குமார் விஜயபாபு என நான்கு பேர் ஒரு இருசக்கர வாகனத்திலும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வில்லியம் அடம், ஹரிஹரன் என இரண்டு பேர் ஒரு இருசக்கர வாகனத்திலும் காரைக்கால் அடுத்த மேலகாசாக்குடி பகுதியில் சென்றுள்ளனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் ஆறு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விபத்து நடந்த பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் அருகில் இருந்த வாகனங்களில் வைத்து அங்கிருந்தவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்பொழுது அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தோஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மீதமுள்ள நான்கு பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த இரண்டு பேரின் உடலை வைத்துக் கொண்டு உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அப்பகுதி விட்டு கலைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.