திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழப்பு!
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் யானை மிதித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். பிரசித்தி பெற்ற கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் சிசு பாலன் ஆகிய இருவரும் யானைக்குப் பழம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆக்ரோசத்துடன் தாக்கத் தொடங்கியது.
கோயில் யானை தெய்வானை வெறிகொண்டு விரட்டி தன் காலால் மிதித்ததில் கோயிலுக்கு வந்த பாகனின் உறவினர் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானை தாக்கியதில் பலத்த படுகாயமடைந்த பாகன் உதயகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இது குறித்து பேசிய வன அலுவலர் ரேவதி ரமணன், திருச்செந்தூரில் உள்ள கோயில் யானையான தெய்வானைக்கு பழம் கொடுக்கும்போது யானைப் பாகன் மற்றும் உறவினரை கடுமையாகத் தாக்கியுள்ளது. தெய்வானை மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். அனைவரிடத்திலும் நட்புடன் பழகும். பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. தெய்வானை திடீரென ஏன் இப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை. யானை தாக்கியது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
கோயில் யானையான தெய்வானை மிதித்து இருவர் பலியானதையடுத்து, மருத்துவக் குழுவினர் தெய்வானையைப் பரிசோதனை செய்து இந்நிகழ்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர். விரைவில் இக்கோர சம்வத்திற்கான காரணம் வெளியே வரும்.