ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!
ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. தற்போது ஜே.என்.1 கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ஆய்வுகளின்படி, ஜே.என்.1ல் ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் ஒடிசாவின் சுந்தர்கர் மற்றும் புவனேஸ்வர் பகுதிகளை சேர்ந்த இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக சுகாதார சேவை இயக்குநர் விஜய்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 28 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டன. அவர்களில் இருவர் ஜெ.என்.1 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! தொடரையும் சமன் செய்தது!
இதனைத் தொடர்ந்து சுந்தர்கரைச் சேர்ந்தவர் வீட்டில் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொருவர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதிதாக பாதிக்கப்பட்டவர்களை சேர்ந்து நாட்டில் இதுவரை 25 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகாவில் தலா ஒருவர் என கொரோனோவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை
4,423-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.