இபிஎஸ் vs ஓபிஎஸ்: இரட்டை இலை யாருக்கு?... மீண்டும் விசாரணையை தொடங்கியது தேர்தல் ஆணையம்!
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து ஓ.பி.எஸ், ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிச்சாமி, சுரேன் பழனிச்சாமி, சூரியமூர்த்தி, காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுக்கள் மீது கடந்த டிசம்பர் மாதம் அனைத்து தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு எதிர்தரப்பு மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை விதித்திருந்தது.
தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து தரப்பினரும் ஆஜராகும் படி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பான விசாரணை தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கி உள்ளது.
விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ். சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி. பழனிச்சாமி, சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரட்டை இலை சின்ன ஒதுக்கீடு விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.