இரண்டு மணி நேர கனமழை...வெள்ளத்தில் மூழ்கிய விலை உயர்ந்த கார்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
குருகிராமில் பெய்த கனமழையால் தனது இரண்டு விலை உயர்ந்த கார்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்ததாக இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கிட்டதட்ட 2 மணி நேரமாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் அந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த சூழலில் குருகிராமில் வசிக்கும் நபர் ஒருவர் தனது பகுதியின் நிலையை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அவரின் இரண்டு விலையுயர்ந்த கார்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காட்டுகிறது.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் அவர் கூறும்போது, "இது மும்பை அல்லது பெங்களூரு அல்ல, இந்தியாவின் மெட்ரோ நகரமான குருகிராமிற்கு வரவேற்கிறேன். நான் எனது வரிகளையும், கட்டணங்களையும் செலுத்துகிறேன். இதனால் ஒரு நாள் எனது சொந்த வீட்டைப் பார்க்க முடியும். என்னுடைய பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ் போய்விட்டது. இந்த நிலைமையை சரிசெய்ய இதுவரை எந்த அதிகாரிகளும் முன்வரவில்லை, நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். இந்த ஆழமான தண்ணீருக்குள் நுழைய எந்த கிரேனும் வராது, நான் அதை முயற்சித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் கூறும்போது, "இப்போது ஹெலிகாப்டர் வாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது" என்றும் மற்றொரு நபர் "அதேசமயம் மழைக்காலத்திற்கு படகு வாங்க வேண்டும்" என்று கூறினார். மூன்றாவது நபர், "உள்ளூர் மாநகராட்சி விரைவில் இதனை சரி செய்ய வேண்டும்" என்றார். இந்த வீடியோ நேற்று அன்று இன்ஸ்டகிராமில் பகிரப்பட்ட நிலையில், இதுவரை 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.