ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - இருவர் கைது!
சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்து பாங்காக்கில் இருந்து இலங்கை கொழும்பு வழியாக விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது டிராலியில் சூட்கேசுடன் வந்த வட மாநில வாலிபர் மீது சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து சூட்கேசை பரிசோதித்த போது எதுவும் இல்லை. ஆனால் அதே விமானத்தில் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு வட மாநில வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்த போது பச்சை பூக்கள், பழம் என காற்றுபுகாத 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் துணிகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவைகளை பிரித்து பார்த்த போது உயர்ரக, பதப்படுத்தப்பட்ட கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 12 பாக்கெட்டுகளில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி என் கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தாய்லாந்து நாட்டில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள் கொழும்பில் இருந்த வாலிபரின் சூட்கேசுக்கு மாற்றப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கடத்தல் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.