KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!
அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கிளை தொடங்குவதற்கு அனுமதி தருவதாக கூறி ஏமாற்றிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி நகர், கீரைக்கார தெருவில் வசிக்கும் கொளஞ்சிநாதன் அரியலூரில் கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கிளை தொடங்குவதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையெடுத்து, KFC கிளை தொடங்குவதற்காக அந்த இணையதளத்தில் NOC, உரிமம், பாதுகாப்பு வைப்பு மற்றும் பதிவு கட்டணம் என பல தவணைகளில் மொத்தம் ரூ.66,20,000 பணத்தை செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், பணத்தை பெற்றுக் கொண்டு கிளை திறப்பு குறித்து எந்தவித தகவலும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக, இணைய குற்ற புகாருக்கான Toll Free எண்:1930-ல் புகார் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
கொளஞ்சிநாதன் அளித்த புகரின்பேரில், அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்து குற்ற செயலுக்காக பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.6,03,029/- முடக்கம் செய்யப்பட்டு, வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, சைபர் கிரைம் காவல்துறை நடத்திய விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் குற்றவாளி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகர், ரஞ்சித்குமார் மற்றும் பெண் காவலர் வசந்தி ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் (39) மற்றும் தருண் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் மோசடியாக பணத்தை பெறுவதற்கு பல்வேறு வங்கிகளில், 15 கணக்குகளை தொடங்கியதாக தெரிவித்தனர்.
இந்த குற்றச்செயலுக்கு பின் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளி உள்ளதாகவும், இது போன்று பொய்யான Website-களை தொடங்கி, அதன் மூலம் பல நபர்களிடம் மோசடி செய்து, ஏமாற்றிய பணத்தினை மேற்கண்ட வங்கி கணக்குகளில் செலுத்த சொல்லி, அதனை தங்களுக்குள் பிரித்து கொண்டது தெரியவந்தது.
மேலும் குற்றவாளிகளிடமிருந்து செல்போன்-02, சிம்கார்டுகள்-04, வங்கி கணக்குப்
புத்தகம் -04, காசோலை புத்தகம்-05 மற்றும் ATM Card-05 ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.