#TVKFlag | “முறையாக அனுமதி பெற்று கொடியேற்றாவிட்டால் நடவடிக்கை பாயும்!” - எச்சரிக்கை விடுத்த கட்சித் தலைமை!
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை கட்சி நிர்வாகிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே ஏற்ற வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அறிமுகம் செய்து வைத்தார்.
இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. இந்த சூழலில், இன்று முதல் தவெக கொடியினை தங்களது இல்லத்தில் பறக்க விட நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், 234 தொகுதிகளிலும் கட்சியினர் கொடி ஏற்றி வருகின்றனர்.
அதே நேரத்தில், பல்வேறு பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக (அனுமதி பெறாமல்) கொடியேற்றி வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை கட்சி நிர்வாகிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே ஏற்ற வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் கட்சி சார்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.