#TVK | அக். 27-ல் தவெக மாநாடு - காவல்துறை அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் மனு!
தவெக மாநில மாநாடுக்கு செப்.23-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டதை, அக். 27-ம் தேதி வழங்க வலியுறுத்தி அக்கட்சியின் பொதுச்செயலாளர் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தன் இலக்கு எனக் கூறிய விஜய், தனது முதல் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. எனவே, மாநாட்டுக்கான பணியில் தவெகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுக்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் மாநாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கி உள்ளார்.
ஒருங்கிணைப்பு குழுவை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவின் தலைமையிலேயே மாநாடுக்கான பணிகள் நடைபெற உள்ளன. மாநாட்டை யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்கள், வெகு தூரங்களில் இருந்து வரும் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெக மாநாடு வி.சாலையில் நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த கட்சி நிர்வாகிகளுடன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் மனு அளித்தார். அந்த மனுவில், செப்.23-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டதை அக். 27-ம் தேதி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.