தவெக பொதுக்குழு கூட்டம் - 20 முதல் 30 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு வரும் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் இதர நிர்வாகிகள் என மொத்தம் 2100 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், பொதுக்குழு நடக்கும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலில் ‘கியூஆர் கோடு’ ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அனைவரும் கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதனிடையே 15 நாட்களுக்கு மேலாக பொதுக்குழு கூட்டத்திற்கு மேடை மற்றும் உள் அரங்கு ஏற்பாடு குழு, வரவேற்பு குழு, உபசரிப்புக்குழு, ஊடக மேலாண்மைக்குழு, தொழில்நுட்பக் குழு என 5 குழுக்கள் பிரிக்கப்பட்டு பொதுக்குழுவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழுவின் சிறப்பம்சங்கள் குறித்தும் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும் பேச உள்ளார். அதில் 20 முதல் 30 தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் சட்ட ஒழுங்கு குறித்தும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகவும், தொகுதி மறு வரையறை, மும்மொழிக் கொள்கை குறித்தும், மக்கள் பிரச்சனைகள் குறித்தும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. தொடர்ந்து மாநில அரசு கொண்டு வந்த திட்டங்களில் செய்த ஊழல்கள் குறித்தும், திமுக அரசு நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்தும், பூத் கமிட்டி மாநாடு குறித்தும், அதிமுக, பாஜக தலைவர்கள் டெல்லி சந்திப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் கட்சியில் ஓராண்டாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். கட்சியின் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டதற்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் கையெழுத்து அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு 21 வகையான மதிய உணவு தயாராகி வருகிறது.