#TVK முதல் மாநாடு | மீண்டும் தேதி மாற்றம்...? காரணம் என்ன?
மாநாடு ஏற்பாட்டுக்கு குறுகிய காலமே உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலை அறிமுகப்படுத்திய அவர், கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாக தெரிவித்தார்.
த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக செப்டம்பர் 23ஆம் தேதி காவல் துறையிடம் அனுமதி கோரி மனுக் கொடுக்கப்பட்டது. பின்பு காவல் துறையி மாநாடு தொடர்பாக 21 கேள்விகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து த.வெ.க. சார்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மாநாட்டில் 50,000 இருக்கைகள் போடப்படவுள்ளதாகவும் 12 மணி முதல் இரவு 10 வரை மாநாடு நடைபெறுவதாகவும் மாலை 6 மணியில் இருந்து விஜய் பேசும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் த.வெ.க. சார்பில் மாநாடு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் மேலும் அவர்கள் த.வெ.க.வில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் த.வெ.க.வின் மாநாடு தள்ளி போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும் இதற்காக நாளை காவல் துறையிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இம்மாநாடு மதுரையில் நடப்பதாகவும் பின்பு சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நடப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.