தீவிரமாக நடைபெறும் TVK மாநாட்டு பணிகள்… மருத்துவ ஏற்பாடுகளில் தனி கவனம்!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான மருத்துவ ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நாளை (அக்.27) நடைபெறும் நிலையில் தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பார்கிங், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மின்விளக்குகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் 700 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 300-க்கும் ஏற்பட்ட கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் மாநாடு நடைபெறும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளனர்.
மாநாட்டு திடல் முழுவதும் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், திடலில் சுமார் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனுடன், மழை பெய்தாலும் பாதிக்காத வகையில், ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக மாநாட்டுக்கான மருத்துவ ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, 150 மருத்துவர்கள், 150 உதவி மருத்துவ டெக்னீஷன்கள் என 300 பேர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், இந்த மாநாட்டுக்காக தனியார் ஆம்புலன்சுகள் பயன்படுத்த உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அரசு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பார்க்கிங்குக்கும் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் எனவும் அதில் ஒரு மருத்துவ குழு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, மாநாட்டு திடல் முன்பு இரண்டு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. மயக்கம் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தேவைபட்டால் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் எனவும் மேல் சிகிச்சை தேவைபட்டால் ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.