‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ - திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இக்கோயிலுக்கு திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இப்பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் பரிகார பூஜைகள் செய்துவிட்டு கடலில் புனித நீராடும் பக்தர்கள், உடுத்திய பழைய துணிகளை கழற்றி கடலில் விட்டு செல்கின்றனர். இதனால் கடலிலும், கடற்கரையிலும் பழைய துணிகள் அதிகளவு ஒதுங்கி கிடக்கிறது. இந்த பழைய துணிகள் பக்தர்கள் நீராடும் போது கால்களில் சிக்கிக் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. கடற்கரையில் அதிக அளவு பழைய துணி ஒதுங்கி கிடப்பதை பார்த்த கோயில் நிர்வாகம் கடல் தூய்மையை பாதுகாக்க வேண்டி பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.