தூத்துக்குடி: கந்த சஷ்டி திருவிழா - சங்கர ராமேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை!
தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடந்ததில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடியில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதை அடுத்து, நேற்று இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில்
வெள்ளி கவச அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார். பின்னர் சிறப்பு
தீபாராதனைக்கு பின் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தனர்.