தூத்துக்குடியில் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 2 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: 70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது – அண்ணாமலை பேட்டி!
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதிகளில் உணவுப் பொருட்களின் தேவை அதிகம் இருப்பதாக கோரிக்கை வந்தது. இதனால் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக கூடுதலாக 2 ஹெலிகாப்டர்கள் கோவை சூலூர் இந்திய விமானப்படையிலிருந்து மற்றும் சென்னை கடலூர் காவல் படையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
நாளை (டிச.20) காலை 06.00 மணி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து 7 ஹெலிகாப்டர்கள் மூலம் மீண்டும் உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகள் தொடங்க உள்ளது.