துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து - பாதுகாப்பு நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை!
விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் நிறுவனம் செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் விமானத்தை நிறுத்துதல், விமானத்தை இழுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், கோவா, கொச்சின், கண்ணூர் ஆகிய 9 விமான நிலையங்களில் தனது சேவையை செய்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அமலுக்கு வரும் வகையில், செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. செலிபியின் வெற்றிடத்தை நிரப்ப இதர ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்றும் விரைவில் அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செலிபி நிறுவனம் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனின் மகள் சுமேயே எர்டோகனுக்கு சொந்தமானது. அண்மையில் சுமேயே எர்டோகனின் கணவரும் தொழிலதிபருமான செல்சுக் பைரக்டரின் நிறுவனத்திற்கு சொந்தமான ட்ரோன்கள் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.