For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஸா போர் நிறுத்த முயற்சி! அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் மீண்டும் பயணம்!

09:33 AM Jun 11, 2024 IST | Web Editor
காஸா போர் நிறுத்த முயற்சி  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் மீண்டும் பயணம்
Advertisement

காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மீண்டும் பிராந்திய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

Advertisement

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம்  இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில்,  காஸாவில் நிரந்த போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி,  இஸ்ரேலிடமும், ஹமாஸ் அமைப்பிடமும் அளித்துள்ளது.  இந்த சூழலில் தங்களது வரைவு திட்டத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிராந்திய நாடுகளில் பிளிங்கன் சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக,  இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் முக்கிய பங்கு வகிக்கும் எகிப்துக்குச் சென்ற பிளிங்கன்,  அங்கு தலைநகர் கெய்ரோவில் அதிபர் அப்தெல் ஃபட்டா அல்சிசியைச் சந்தித்துப் பேசினார்.  ஆனால்,  அந்தப் பேச்சுவார்த்தையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.  எகிப்தைத் தொடர்ந்து,  இஸ்ரேல்,  ஜோர்டான்,  கத்தார் ஆகிய நாடுகளுக்கும் சென்று ஆன்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக,  காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்குமான மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை அதிபர் ஜோ பைடன் கடந்த மே 31-ஆம் தேதி வெளியிட்டார்.

இதையும் படியுங்கள் : 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!

அந்த ஒப்பந்த திட்டத்தின் கீழ்,  முதல் கட்டமாக,  6 வாரங்களுக்கு முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.  காஸாவில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் அனைத்து பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் படையினர் வெளியேறுவார்கள்.  பெண்கள் பிணைக் கைதிகள்,  முதிய மற்றும் காயமடைந்த பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள்.  அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் . இந்த முதல் கட்டத்தில் காஸா பகுதிக்குள் தினமும் 600 நிவாரண லாரிகள் அனுமதிக்கப்படும்.

ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டத்தில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட எஞ்சிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாக, காஸாவில் மறுகட்டமைப்புப் பணிகள் மிகப் பெரிய அளவில் முடுக்கிவிடப்படும் என்று அந்த நிறுத்த ஒப்பந்த திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த வரைவை ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் அரசும் பரிசீலித்துவரும் சூழலில், பிராந்திய நாடுகளுக்கு பிளிங்கன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Tags :
Advertisement