“அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்... தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” - பிரேமலதா விஜயகாந்த்!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இது ஏற்கனவே 2024 தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அதிமுக ராஜ்யசபா சீட்டு தேமுதிக கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி. அதற்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக நாங்கள் பதட்டமோ, பயமோ வேறு எந்த முடிவோ எடுக்கவில்லை.
பொறுமைக் கடலினும் பெரிது என்று பத்திரிகையாளர்களுக்குதான் நான் கூறினேனே தவிர, அந்த பழமொழி எங்களுக்கு கிடையாது. திமுக தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது.
அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். வார்த்தை தான் முக்கியம். கொடுத்த வார்த்தை மீது முடிவு எடுத்தால் தான் பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள்.
2024 தேர்தலிலேயே 5 எம்பி சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் முடிவு செய்யப்பட்ட ஒன்று.
தேமுதிகவிற்கு வந்த வாய்ப்பை ஒரு முறை அன்புமணி ராமதாஸ் தட்டி பறித்து விட்டார். மற்றொரு முறை ஜி.கே. வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. எனவே தான் கூறுகிறோம். ஏற்கனவே முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட் தேமுதிகவிற்கு தர வேண்டியது அதிமுகவின் கடமை.
சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து, தேமுதிகவிற்கு அதிமுக தலைமை அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தை கூறிவிட்டு வந்து விடுவார்கள் (கமல்ஹாசன் குறித்து). அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். அவர் அவர்களுக்கு அவர் அவர்கள் தாய்மொழி பெரிது. முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பது சர்ச்சைக்குரிய ஒன்று. பல்வேறு காண்டங்களில் தமிழ் முதன்மையானது மொழி என்று கூறப்பட்டுள்ளது. ஆதி மொழி, முதல் மொழி தமிழ். அவர் அவர்கள் மாநிலத்திற்கு அவரவர் தாய்மொழி பெரிது.
அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் தேமுதிக நிலைப்பாடு. முதலில் தமிழ் மொழி தான் கற்க வேண்டும். அதுதான் தேமுதிக நிலைப்பாடு. இந்த சர்ச்சை பேச்சு பட ப்ரமோஷனுக்காக நடத்தப்பட்டதா என்பது குறித்து
அவர்தான் விளக்க வேண்டும். அன்பு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அன்பு என்பவர் யார் என்று கமல் விளக்க வேண்டும்.
இரண்டு நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்
அறிவிக்கப்பட உள்ளனர். நாங்கள் எங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய முயற்சிகளுக்கு ஆறு மாதம் எங்களுக்கு தேவை. அதனால் தான் கூறுகிறேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் எங்களுடைய நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படும்.
கட்சி தொடங்கியதால் விஜய்யை எங்களுக்கு பிடிக்கவில்லை, அதற்கு முன்பிலிருந்து பிடிக்கும். செந்தூரப்பாண்டி படத்தில் இருந்து எங்களுடைய வீட்டிற்கு அடிக்கடி விஜய் வருவார். தேமுதிக மற்றவருக்கு யோசனை கூறக்கூடிய இடத்தில் இல்லை. அதேபோன்று விஜய்யும் யோசனை பெறக்கூடிய நிலையில் இல்லை. அவருடைய கட்சியை வளர்ப்பது என்பது அவருக்கு தெரியும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஞானசேகரன் குற்றவாளி என்று
அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்படக்கூடிய அதே தண்டனை அவருக்கு பின்னால் உள்ளவர்களையும் கைது செய்து அவர்களுக்கும் வழங்க வேண்டும். சமீப காலமாகவே ஒவ்வொரு கட்சியினரும், எங்களால் தீர்வு வந்தது, உங்களால் வந்தது எனக் கூறிகொள்கிறார்கள். இது மாற்றப்பட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யாராலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தால் தான் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் தான் இந்த விசாரணையானது நடைபெற்றது. அதனால் தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சினை என்பது அவர்களுடைய குடும்ப பிரச்சனை. இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது. பல்வேறு குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் மீது ராமதாஸ் வைத்து வருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுத்ததே தவறு என்று தற்போது கூறுகிறார். காலம் கடந்த யோசனையாகதான் இதை நான் பார்க்கிறேன். இதை இப்போதுதான் அவர் உணர்ந்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நம்மை நாம் பாதுகாக்க கூடிய கடமை நமக்கு உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இனிவரும் தேர்தல்களில் தனித்து ஆட்சி என்பது இருக்காது. ஆட்சியில் பங்கு என்ற நிலை தான் ஏற்படும். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆளும் கட்சி மீதும் ஆண்ட கட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இங்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வந்துள்ளதால் வரும் காலங்களில் ஆட்சியில் பங்கு என்ற நிலை தான் ஏற்படும்” என தெரிவித்தார்.