Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்... மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அவரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 
01:00 PM May 22, 2025 IST | Web Editor
இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அவரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 
Advertisement

இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த கூற்றை ஒரு முறை கூட நிராகரிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“அதிபர் டிரம்ப் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக கூறுவது இது எட்டாவது முறையாகும். ஆபரேஷன் சிந்தூரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார். பிரதமர் மோடி இந்தக் கூற்றை ஒரு முறை கூட நிராகரிக்கவில்லை. இந்த மௌனத்தின் அர்த்தம் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப், “இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை நாங்கள்தான் தீர்த்து வைத்தோம். வர்த்தகம் மூலம் நான் தான் அதனை தீர்த்து வைத்தேன். பாகிஸ்தானிலும் சிறந்த மனிதர்கள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நல்ல நண்பர்கள் மற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

ட்ரம்ப் இவ்வாறு கூறுவது இது முதல்முறை அல்ல. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க உதவியதாக ட்ரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி அதிகாலை பயங்கரவாத அமைப்புகள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் தாக்குதல்களை நடத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, மே 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் இந்திய ராணுவத் தளங்களை நோக்கி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களையும் முறியடித்ததாக இந்தியா தெரிவித்தது. நான்கு நாட்களாக இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, மே 10 அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலை முடித்துக் கொள்வதாக அறிவித்தன. 

அன்றே அமெரிக்காவின் "மத்தியஸ்தம்" மூலம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.

Tags :
"Operation SindoorCongressDonald trumpPM Modi
Advertisement
Next Article