பிரதமர் மோடி "அற்புதமானவர்" - அமெரிக்க முன்னாள் அதிபர் #DonaldTrump புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் நடப்பு ஆண்டோடு முடிவடையவுள்ளதால், நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்று மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்ட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசுகையில், அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி "அற்புதமானவர்" என்றும் அவரை அடுத்த வாரம் சந்திப்பேன் என்று கூறினார். ஆனால் அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
இதையும் படியுங்கள் :Doctor படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்… மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!
பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய அமெரிக்க அதிபராக இந்தியா வந்தபோது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.