இந்திய அரசியல்வாதிகள் பாணியில் ட்ரம்ப்? #Frenchfries சமைத்து நூதனப் பிரச்சாரம்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாக்குகளை வாங்க பல வித்தியாசமான பிரச்சார யுத்திகளில் இறங்குவார்கள் அரசியல்வாதிகள். மக்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது, கடைகளில் தேநீர் போடுவது, தோசை சுடுவது, கோயில்களுக்கு சென்று தூய்மைப் பணியில் ஈடுபடுவது, இவ்வாறு பல சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறும்.
இந்நிலையில், அமெரிக்காவிலும் தற்போது இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு தேர்தல் பிரச்சார களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வாக்குகளை ஈர்ப்பதற்காக பென்சில்வேனியா சென்ற ட்ரம்ப் ‘ ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்’ செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மெக் டொனால்ட் நிர்வாகியிடம், “எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை” என்று டிரம்ப் கூறுகிறார். பின்னர் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் செய்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.