"டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை..” - ஹரியானா அமைச்சர் அனில் விஜ் பேட்டி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று முன்தினம் (பிப். 5) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது,
“ஒரு நபர் மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றால், பின்னர் அந்த நாடு அவரை வெளியேற்ற எல்லா உரிமையையும் பெற்றுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை. இதில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக உள்ளனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலோ பிறந்தவர்கள். ஆனால் நாம் அவர்களுக்கு உணவு அளிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்” இவ்வாறு அனில் விஜ் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். இதில் தலா 33 பேர் குஜராத் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தலா 3 பேர் மகராஷ்டிரா, உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சண்டிகரை சேர்ந்தவர்கள்.
இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் உடன் இது தொடர்பாக பேச வேண்டும் என பஞ்சாப் மாநில அமைச்சர் தலிவால் வலியுறுத்தியுள்ளார்.