இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் - டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்று கூறியிருந்தார்.
தற்காலிகமான வரிகள் நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய அறிவிப்புகள் அன்றைய தினம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதில் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே கூறிய பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதேபோல் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா, சீனா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு எதிராகவும் பரஸ்பர வரியை டிரம்ப் விதித்து இருக்கிறார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49, வியட்நாம் மீது 46, இலங்கை மீது 44 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்பபடுவதாக அறிவித்து இருக்கிறார். அதேபோல, அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.