விஜய்யின் கட்சியான “TVK"க்கு சிக்கல் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கும் ஆங்கிலத்தில் “TVK” என வருவதால் இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முறையிடவுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த பிப். 2-ம் தேதி விஜய் சார்பாக டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியின் பெயரை புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார். தமிழக வெற்றி கழகம் (TVK) என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு தேர்தலில், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் அரசியல் பயணம் துவங்கும் என விஜய் அறிவித்துள்ளார். வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் 1984-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானதால், தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்க முடிவு செய்தததாக கூறப்படுகிறது.
இதனிடையே 'TVK' என்ற பெயரில் பரவலாக அறிமுகமான அரசியல் கட்சி செயல்பாட்டில் உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு வேல்முருகன் தொடங்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி, அப்போது முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் தற்போது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு TVK எனவும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சிக்கு TVK என வருவதால், இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முறையிடப்போவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுகவிடம் இருந்து அழைப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் சுருக்கமாக TVK என்று பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்தை முறையிடுவோம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியை TVK என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறோம். விஜய் கட்சியும் TVK என்று அனுமதித்தால் மக்களிடையே குழப்பம் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.