ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'த்ரிஷ்யம்'. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் தமிழ் (பாபநாசம்), தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் கொரியன் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
‘த்ரிஷ்யம் 2’ படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் த்ரிஷ்யத்தின் இரண்டு பாகங்களும் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. படத்தினை ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய பனோரமா ஸ்டுடியோஸ் அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்துள்ளது. ஒரு இந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து பனோரமா நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கத் பதக் கூறுகையில், “த்ரிஷ்யத்தின் புத்திசாலித்தனமான கதைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் கொண்டாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். கொரிய மொழியைத் தொடர்ந்து அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 10 நாடுகளில் ‘த்ரிஷ்யம்’ படத்தைத் தயாரிப்பதே எங்கள் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.