திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் : யூசுப் பதான் , மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 42 பேரின் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி!
மக்களவைத் தேர்தலுக்கான திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் யூசுப் பதான் , மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 42 பேரின் பட்டியலை மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் , சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் திமுக கட்சிகளிடையே கூட்டணிகளும் தொகுதி பங்கீடுகளும் நிறைவடைந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதேபோல தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளோடு இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
இதேபோல இடதுசாரிகள் ஆளும் மாநிலமான காங்கிரஸ் மற்றும் இடசாரிகளுக்குத்தான் நேரடி போட்டி நிலவுகிறது. சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டது. அதன் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல ராகுல் காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்து அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்த நிலையில், மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக திரிணாமூல் காங்கிரஸ் சமீபத்தில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி நேரடியாகக் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கத்தில் வெற்றி பெற முடியாது என மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் 42 பேர் கொண்ட மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பியான மஹுவா மொய்த்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மற்றும் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதன் படி யூசுப் பதான் பெர்ஹம்பூர் தொகுதியிலும், மஹூவா மொய்த்ரா கிரிஷ்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.