பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு!
பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேற்ற வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட 'ஹுவாஸ்காரன்' மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியம் ஸ்டாம்ஃபில் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் ஹுவாஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் அவரது உடல் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தால் பனி உருகிய நிலையில் அவரது பாஸ்போட்டை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “அவரது உடல், உடைகள், மலையேற்றக் கருவிகள், காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தன. அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்ஃபில் என அடையாளம் காணப்பட்டது” என்றனர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவரான லெனின் அல்வார்டோ கூறுகையில், ஸ்டாம்ஃப்பிலின் உடைகள் பெரும்பாலும் அப்படியே உள்ளன. அவரது ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய இடுப்புப் பையில் 2 சன்கிளாஸ்கள், கேமரா, குரல் ரெக்கார்டர், 2 சிதைந்த 20 டாலர் பில்களும் இருந்தன. ஒரு தங்க மோதிரம் இடது கை விரலில் இருந்தது” என்றார்.
வில்லியம் ஸ்டாம்ஃபில் மற்றும் அவரது நண்பர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கிளிமஞ்சாரோ, ரெய்னியர், சாஸ்தா மற்றும் தெனாலி சிகரங்களை அடைந்ததாக 2002-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை தெரிவிக்கிறது. பனிச்சரிவுக்குப் பிறகு எர்ஸ்கைனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ரிச்சர்ட்சனின் சடலம் இன்னும் காணப்படவில்லை.