மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை - வெளியான முக்கிய தகவல்!
பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான ஒப்புதலை காப்பீடு நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் வழங்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அனைத்து வயதினருக்கும் அவா்களின் உடல் பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான கட்டண வரம்பு வசதிக்கேற்ற மருத்துவமனையை தோ்வு செய்யவும் அல்லது கூடுதல் பலன்களை அளிக்கும் பன்முக காப்பீடு திட்டங்களை தெரிவுசெய்யவும் விரிவான வாய்ப்புகளை காப்பீடுதாரா்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு காப்பீடு ஆவணத்துடனும், வாடிக்கையாளா் தகவல் (சிஐஎஸ்) கையேடு வழங்கப்பட வேண்டும். அதில், எளிமையான சொற்றொடா்களில் காப்பீட்டின் வகை, காப்பீடு தொகை, எந்தெந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்ற விவரம், தவிா்க்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளின் விவரம், குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காத்திருப்புக் காலம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.
பணமில்லா சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதை ஒரு மணி நேரத்துக்குள்ளாக காப்பீடு நிறுவனங்கள் தீா்மானிக்க வேண்டும். அடுத்த 3 மணி நேரத்துக்குள்ளாக இதற்கான இறுதி அனுமதியை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு பலன்களைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை காப்பீடுதாரா் சமா்ப்பிக்க வேண்டியத் தேவையில்லை. மாறாக, காப்பீடு நிறுவனங்களே சம்மந்தப்பட்ட மருந்துவமனைகளிலிருந்து தேவையான ஆவணங்களை சேகரிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.