“பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்” -இணையத்தை ஆக்கிரமித்த நடிகர் #Ajithkumar வீடியோ!
அஜித் ஒரு பயணத்தின் போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கும் அஜித்குமார் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ ‘பஹீரா’ ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித், பயணம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சாதியும், மதமும்
அந்த வீடியோவில் பேசி இருக்கும் அஜித், “ மக்கள் பயணம் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரை, பயணமும் ஒரு வகை கல்விதான். மதமும், சாதியும் நாம் சந்திக்காத மனிதரை கூட வெறுக்க வைத்து விடும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழியை நான் ஏற்கிறேன். காரணம், நாம் அதில் அடையாளப்பட்டு சிக்கிக்கொள்ளும் போது, நாம் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட சந்தேகத்திற்கு உள்ளாக்குவோம்.
ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது, புது வித கலாச்சாரத்தை தெரிந்து கொள்வீர்கள். பல நாட்டு மக்கள், மதத்தினர் உடன் உரையாடுவீர்கள். அப்போது நீங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்வீர்கள். இது உங்களை அதிக புரிதல் உள்ள மனிதராகவும், இரக்கமுள்ள மனிதராகவும், உங்களை மேம்பட்ட மனிதராகவும் மாற்றும்.” என்று பேசி இருக்கிறார்.