2வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பணிக்கு வராதவர்களை கணக்கெடுப்பு பணி துவக்கம்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக பேருந்து சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசு சார்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாத்தையடுத்து நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்தது. எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கி உள்ளது.
பேருந்து சேவை சீராக இயக்கப்பட்டு வரும் நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.