For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தண்டனைக்குள்ளாகும் பாலின அடையாளம்!

05:33 PM Mar 31, 2024 IST | Web Editor
தண்டனைக்குள்ளாகும் பாலின அடையாளம்
Advertisement

''ஏன் இந்தப் பிறவிய எனக்கு கொடுத்த கடவுளேன்னு... செடி, கொடிய கட்டிப்புடிச்சி அழுவேன்” என்று கண் கலங்குகிறார் 87 வயதான திருநங்கை டாக்டர். மோகனா மூக்நாயக். அவர் பெயருக்கு முன் உள்ள டாக்டர் பட்டம் அவர் படித்து வாங்கியது அல்ல, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையத்தை திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி வருவதால் “DIOCESS OF ASIA” எனும் அமைப்பு வழங்கி கவுரவித்தது.            

Advertisement

வடசென்னைக்கு அருகே எர்ணாவூரில், அரசு கட்டிக் கொடுத்துள்ள சுனாமி குடியிருப்பில் எண்ணற்றத் திருநங்கைகள் வசிக்கிறார்கள். குடும்ப மற்றும் ரத்த உறவுகளின் நிராகரிப்பையும் சமூகத்தின் விமர்சனத்தையும் தினசரி வாழ்வின் பெருந்துயரங்களையும் தங்கள் பாலின அடையாளத்துக்காக எதிர்கொள்ளும் இவர்களுக்கு, வாழ்வின் அடிப்படைப் பிடிமானமான கல்வி கற்கும் சூழல் வாய்க்கவில்லை.

பாலின உணர்வு உந்தித் தள்ள பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகள், வாழ்வாதாரத்திற்காக கடைத்தொழில் என்னும் பிச்சை எடுக்கும் தொழில் செய்கின்றனர் அல்லது பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர். இவை தவிர வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டுமெனில் கல்வி தேவை. அந்த கல்வி கிடைக்க அரசு, கல்வி நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட திருநங்கைகளின் குடும்பத்தினர் மற்றும் பொது சமூகத்தினரின் ஒத்துழைப்பு தேவை.

''நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் யாராக இருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் அனைவருக்கும் சமமானவர். உங்களை நீங்களே நியாயப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரையும் போல் அழகானவர்''  என்கிறார் பாலின சமத்துவ எழுத்தாளரான இங்கிலாந்தை சேர்ந்த ஜூனோ டாசன். ஆனால் இவ்வுலகம் அவர் சொன்னதன் அடிப்படையிலா இயங்குகிறது?

EEE பொறியியல் படிப்பில் சேர்ந்த மேஹா தனது பாலின அடையாளத்தை உணரத் தொடங்குகிறார். குடும்பத்தினரால் வழங்கப்பட்ட பாலின அடையாளத்தில் இருந்து வெளிவர நினைக்கும் அவர் கல்லூரிக்கு செல்லாமல் திருநங்கைகளைத் தேடிச்செல்கிறார். வீட்டிற்கு வெளி உலகத்திற்கும் தெரியாமல் தனது பாலுணர்வு அடையாங்களை மறைத்து கல்லூரியில் சேர்கிறார். இவரது மாற்றங்கள் கல்லூரியில் உடன்படிப்பவர்களால் அடையாளம் காணப்படுகிறது. சக மாணவர்கள் தொடர்ந்து கேலி செய்ய கல்லூரிக்குச் செல்வதையே நிறுத்தி விடுகிறார். வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு கிளம்பும் இவர் திருநங்கைகளுடன் நேரத்தை செலவிடுவதில் மனமகிழ்ச்சி அடைகிறார். இறுதியில் பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொள்கிறார். கல்லூரிக்குச் சரியாக செல்லாததால் பருவத்தேர்வுகளை எழுத முடியாமல் போனது. தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கல்லூரிப் படிப்பை முடித்த சான்றிதழை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள் பள்ளிப் படிப்பையே தாண்டாத ஷானுவும், திவ்யாவும். தூய்மைப் பணியாளர்களாக இருப்பவர்கள் அதனை கவுரவமான ஒரு பணியாக வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலியல் தொழில், கடைத்தொழில் செய்வதைவிட தூய்மைப் பணியாளராக வேலைசெய்வதை அவர்கள் பெருமையாகவே பார்க்கிறார்கள்.

அதுவும்கூட 4 ஆண்டு ஒப்பந்தம் தான். அதன்பிறகு இந்த ஒப்பந்தம் தொடருமா என்றுகூடத் தெரியாது. ''எனது குப்பை. எனது பொறுப்பு'' என மக்களை உறுதியெடுக்கச் சொல்லும் அரசு தங்களையும் கைவிட்டு விடாது என்ற நம்பிக்கையோடும் ''நம்ம ஊரு.. செம ஜோரு..” பாடலோடும் குப்பை எடுத்துச் செல்லும் பேட்டரி வண்டியை இயக்குகிறார்கள் ஷானுவும் திவ்யாவும். அவர்களின் ஒரே கவலை “படிச்சிருந்தா நல்ல வேலைக்கு போயிருக்கலாமே” என்பது தான்.

3-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, ரயிலில் டிக்கெட் கூட எடுக்காமல் 3 நாட்கள் பயணம் செய்து மும்பைக்கு சென்று இறங்கிய ஃபாத்திமா பீவியை அடையாளங் கண்டு பசியாற்றிய திருநங்கை ஒருவர் அவருக்கு அடைக்கலமும் கொடுத்திருக்கிறார். கடைத்தொழில், பார் டான்சர் வேலை, பாலியல்தொழில் என 20 ஆண்டுகள் மும்பையில் வாழ்க்கையைக் கழித்துவிட்டு சென்னை திரும்பிய பாத்திமா பீவி இப்போதும் கடைத்தொழில் தான் செய்கிறார். இடைப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட வலிகள், ஏமாற்றங்கள், சித்திரவதைகள் இவரை தற்கொலைவரை தூண்டி இருக்கிறது. அந்த எண்ணத்தின் சாட்சியாக தீக்கிரையான அவரது உடலின் சுருக்கங்கள் அவரது மனதின் வலியை உணர்த்துகின்றன. “படிச்சிருந்தா என் வாழ்க்கை இப்படி போயிருக்காதுல்ல” என்கிறார் விரக்தி நிரம்பிய மனதோடு.

திருநங்கைகள் வாழ்வில் ‘நான் மட்டும் படிச்சிருந்தா’ என்ற வார்த்தை, ஆயிரம் அர்த்தங்களை கொண்டது. கல்வியறிவு, பாலின பாகுபாடு, வேலைவாய்ப்பின்மை, கல்வி இடைநிற்றல், பாலியல்தொழில், உளவியல் பாதிப்பு இவை அனைத்தும் திருநர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. கல்வி கற்கும் போது பள்ளி/கல்லூரி வளாகத்தில் எளிதில் தாக்கப்படும் மாணவர்களாக திருநங்கை சமூகத்தினர் இருக்கிறார்கள். ஆசிரியர்களிடம், கல்வி அலுவலர்களிடம், சக மாணவர்களிடம் உடல்ரீதியான தாக்குதலோடு மனரீதியான உளவியல் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.

தகாத வார்த்தைகள் மற்றும் கடுமையான சொல்லாடல்களால் கேலிக்குள்ளாக்கப்படுகிறார்கள். கூடவே பாலியல் வல்லுறவுக்கும் ஆளாகிறார்கள். அமெரிக்கன் கல்லூரியின் சுகாதார அமைப்பும் தேசியக் கல்லூரி சுகாதார அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த ஆய்வில் கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை, தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களுக்கு திருநர் சமூகத்தினர் ஆளாகும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருவதாக அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது.

டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு கண்ட ப்ரீத்தி, தன் பாலின அடையாளத்தை உணரத் தொடங்கியதும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். திருநங்கை ஒருவர் உதவியுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ப்ரீத்தி, தனது தந்தை இறந்த செய்தி அறிந்து வீட்டிற்கு செல்கிறார். பர்தா அணிந்து தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு சென்ற ப்ரீத்தியின் வருகையை அவரது சகோதரர் விரும்பவில்லை. உறவினர்கள் முன் ஏதாவது தகராறு செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் தந்தையின் உடலைப் பார்த்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர், மனதில் தந்தையின் நினைவுகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை தூரத்தில் இருந்து மறைந்து நின்று பார்த்திருக்கிறார் ப்ரீத்தி. தனக்கு நேர்ந்த இந்த அவலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று திருநங்கைகள் வாழ்வு சற்று மாறி இருக்கிறது என்றும் அதற்கு காரணம் அவர்களுக்கு முன்பு இருந்த திருநங்கைகளின் தொடர் போராட்டம் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார் ப்ரீத்தி.

குடும்ப நிராகரிப்பு, பாலின உறுதிப்பாட்டு அறுவைசிகிச்சை, கல்வி கற்க ஏதுவற்ற சூழல், பொருளாதாரத் தேவைகள் என திருநங்கைகளை போன்றே திருநம்பிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஒரே மாதிரியானவைதான். அதைத் தாண்டி திருநம்பி ரமேஷ் வைக்கும் கோரிக்கை முக்கியமானது. ''திருநர்களுக்கு போட்டித் தேர்வுகளில் மதிப்பெண்களில் எல்லாம் சலுகை எதிர்பார்க்கவில்லை. ஆனால் உடற்தகுதித் தேர்வுகளில் குறிப்பாக காவல் துறைக்கான உடற்தகுதித் தேர்வுகளில் திருநர்களுக்கு உடற்தகுதியில் சில மாறுதல்களை கொண்டு வந்தால் இன்னும் அதிகளவில் பங்கேற்க வாய்ப்புண்டு'' என்கிறார் ரமேஷ்.

நீதிபதிகள் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் உள்ள அதிகாரிகளிடம் திருநர்களின் பிரச்னைகளை புரிய வைப்பதே தங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் திருநர் சமூகத்தினர் அங்கம் வகித்தால் சக திருநர் சமூக மக்களின் உணர்வுகளை, பிரச்னைகளை புரிந்துக் கொள்வார்கள் என்கிறார் தற்போது பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் திருநம்பி ரமேஷ்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் திருநம்பியான அருண் கார்த்திக், உளவியல் பயிற்சிகளின் அவசியத்தையும், கல்வி வளாகங்களில் பால்நடுநிலைக் கழிப்பிடங்கள் மற்றும் விடுதிகள் அமைக்க வேண்டியது அவசியம் என்கிறார். அதோடு, அவரவர் பாலின அடையாளங்களை விருப்பத்திற்கு ஏற்ப அடையாளப்படுத்திக் கொள்ள திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டம் வழிவகை செய்கிறது.

ஆனால் திருநங்கை ஒருவர் தன்னை பெண் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவோ, திருநம்பி ஒருவர் தன்னை ஆண் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவோ அனுமதிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்த சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என்கிறார் அருண் கார்த்திக். மேலும் மாவட்டந்தோறும் பால்நடுநிலை விடுதிகளை அரசே கட்டித்தந்தால் வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் கல்வியை தொடர பேருதவியாக இருக்கும் என்கிறார்.

இந்தியாவில் கல்வி கற்ற திருநர்கள் எண்ணிக்கை:

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 4,87,803 திருநர்கள் உள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் 22,364 திருநர்கள் உள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1,37,465 பேர் உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக அளவாக மிசோரமில் 87.14% திருநர்கள் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். கேரளாவில் 84.61% பேரும், தமிழ்நாட்டில் 57.78% பேரும் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். அதே போன்று ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 74.04% என்றாலும், கல்வியறிவு பெற்ற திருநர்கள் 56.10% தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளவர்கள் 53.30% என்றாலும், வேலைவாய்ப்பு பெற்ற திருநர்கள் வெறும் 34% பேர் மட்டுமே. 2021-ம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்னும் எடுக்கப்படாததால் தற்போதைய நிலவரம் சரியாகத் தெரியவில்லை. எனினும், திருநர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அளவுக்கு அவர்கள் கல்விபெறும் வாய்ப்போ வேலைவாய்ப்போ அதிகரித்திருக்காது என்பதே நிதர்சனம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2024- 2025-ம் ஆண்டு பட்ஜெட்டில் திருநர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமூகநல வாரியத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் ‘திருநங்கைள் நல வாரியம்’ மூலமாக தமிழ்நாடு முழுவதும் திருநர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அந்த முகாம்கள் மூலமாக திருநர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதோடு கல்வி பயில்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளியில் இடைநின்ற திருநர்களைக் கண்டறிந்து அவர்கள் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வினை தனித்தேர்வாக எழுதும் வாய்ப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்க இருக்கிறது. கூடவே பள்ளி, கல்லூரிக்கான வயது வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளதால் அதிக அளவிலான திருநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ''தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை, இலவச வீடுகள், தொழிற்கடன் ரூ.50 ஆயிரம், திருநர் அடையாள அட்டை, சான்றிதழ்களில் பெயர் மாற்றம், அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு திட்டங்களை இதுவரை செயல்படுத்தி வந்தோம்'' என்று குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது திருநங்கைகளுக்கும் அந்தத் திட்டத்தை நீட்டிக்கக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று திருநங்கைகளுக்கு இலவச பேருந்து திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் 2024-2025 தமிழ்நாடு பட்ஜெட்டில் திருநர்களுக்கு உயர்கல்வி இலவசம் என்ற அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து நம்மோடு அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் திருநர்களுக்கு உயர்கல்வி கிடைத்தாலே தகுந்த பணிக்கு செல்ல முடியும். அதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் இத்திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என எங்கு வேண்டுமானாலும் திருநங்கைகள் இலவசமாகத் தங்கி அவர்கள் விரும்பும் பிரிவில் படிக்கலாம். கல்விக்கான செலவோடு தங்கும் விடுதிச் செலவையும் அரசே ஏற்கும்'' என்று குறிப்பிட்டார்.

கேரளாவின் பால்நடுநிலை விடுதிகள் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல டாடா கல்வி நிறுவனங்கள், ஐஐடி கராக்பூர், ஐஐடி மும்பை உள்ளிட்ட இடங்களில் பாலின பேதமற்ற அனைத்து பாலின சமூகத்தினரும் பயன்பெறும் வகையில் LGBTQIA+ சமூகத்தினருக்கென்று பிரத்யேக தங்கும் விடுதிகள் உள்ளன. அது போன்று தமிழ்நாட்டிலும் அரசு பாலின நடுநிலைக் கொண்ட விடுதிகளை கட்டுமா? என்ற நம்முடைய கேள்விக்கு, தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலயே திருநங்கைகள் உயர்கல்வி கற்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது அத்தகைய விடுதிகளையும் முதல்வர் பரிசீலிப்பார் என்றார் அமைச்சர் கீதா ஜீவன். உயர்கல்வி கற்கும் திருநர்களுக்கு உரிய பாதுகாப்பான சூழலை கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையில் உயர்கல்வித்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பதனையும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். கூடவே நடப்பாண்டு முதல் திருநர்கள் கல்வி கற்கும் தரவுகள் அரசு தரப்பில் ஆவணப்படுத்தப்பட்டு அவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்கிறார்களா என கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

திருநங்கைள் வாரிய உறுப்பினராக இருக்கும் திருநங்கை பிரியா பாபு பேசும்போது, அரசின் திட்டத்தை வரவேற்பதாகவும் அதே நேரத்தில் இதை நடைமுறைப்படுத்தும்போது அங்குள்ள பேராசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு திருநர்கள் குறித்த புரிதல் ஏற்படும் வண்ணம் அதற்கான பயிற்சியினை அரசு வழங்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். கூடவே, உளவியல் சார்ந்த ஆலோசனைகளுக்கு நன்கு பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களை கல்லூரிகளில் பணி அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

மறைந்த முதலமைச்சர் திரு.கருணாநிதி அழகான பெயராக திருநங்கை/ திருநம்பி என்று தங்களுக்கு பெயர் வைத்தபோதும் தற்போது அரசு ஆவணங்களில் மூன்றாம் பாலினத்தவர் என்றே குறிப்பிடுகிறார்கள். அதற்கு மாற்றாக திருநங்கைகள்/ திருநம்பிகள் என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்வதாகவும் பிரியா பாபு கூறினார். மேலும் உயர்கல்வி பயிலும் திருநர்கள் விளையாட்டுத்துறையிலும் சாதிக்கும் விதமாக அரசாணை வெளியிட வேண்டும். அப்போது தான் கல்வியில் பின் தங்கிய திருநர்கள் விளையாட்டுக்கென உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் கல்வியில் சேரவும், வேலைவாய்ப்பு பெறவும் உதவும். அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரியா பாபு கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக நம்மிடம் பேசிய திருநங்கைகள் வாரிய உறுப்பினரான அனுஸ்ரீ, பொறியியல் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அனுஸ்ரீயின் கவலை என்னவெனில் தனியார் கல்வி நிறுவனங்கள் திருநங்கைகளை சேர்க்கும்போது தங்களால் கல்வி நிர்வாகத்திற்கோ மற்ற மாணவர்களுக்கோ பிரச்னை எதுவும் வராது என்று எழுதி தரச் சொல்லி கேட்பார்கள். அல்லது திருநங்கை என்ற அடையாளத்தையே மறைத்துக் கொண்டு படிக்கச் சொல்வார்கள். அப்படியான நிபந்தனைகளின்றி தமிழ்நாடு அரசின் உத்தரவை கல்வி நிறுவனங்கள் அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். கூடவே தன் அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “கல்வி தான் முக்கியம்; இல்லை என்றால் கடைத்தொழில், பாலியல் தொழிலுக்குத் தான் போவோம் என்பதால் எப்படியாவது கல்வி கற்றுவிட வேண்டும் என்று உறுதியோடு அடையாளத்தை மறைத்து கல்லூரியில் சேர்ந்தேன்.

சில நாட்களில் நான் ஒரு திருநங்கை என்பதை கல்லூரி மாணவர்கள் அடையாளங்கண்டு என்னை கடுமையாக விமர்சிக்கவும், கேலி பேசவும் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மன உளைச்சலுக்கு ஆளான நான், கேலிகளும், கிண்டல்களும் அதிகரிக்க உடைந்து போனேன். கல்லூரி நிர்வாகத்திடம் போய் உண்மையை சொன்னேன். என் கல்லூரியின் நிர்வாகி ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, அதனால் என் நிலையை புரிந்துகொண்டு நான் தொடர்ந்து அங்கேயே கல்வி கற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததோடு, எனக்கு கல்வியை இலவசமாக்கி கொடுத்தார். எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் கிடைக்காது.'' என்றார் அனுஸ்ரீ.

திருநங்கைகளுக்கு தேசிய அளவில் அடையாள அட்டை, LGBTQIA+ சமூகத்தினரை உள்ளடக்கிய தேசியக் கல்விக்கொள்கை, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த smile திட்டம், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை கண்டறிந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி தக்‌ஷின் திட்டம், திருநங்கைகளுக்கு வீடு, உணவு, மருத்துவ சேவைகள் வழங்கும் திட்டம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயில ஊக்கத்தொகை என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இது போதுமா என்றால் போதாது.

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில், திருநர் சமூகம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்களது உரிமைகளை பாதுகாக்க, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி இருந்தது. 2019-ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் பகுதி 13 மற்றும் பகுதி 14-ன் கூறுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சுயதொழில் மேம்பாடு உள்ளிட்டவற்றை விவரிக்கிறது .

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 50% மகளிருக்கும், 5% LGBTQIA+ சமூகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய பணியிடங்களை உருவாக்குவோம் என கோத்ரெஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது கவனிக்கக்கூடிய ஒன்று. ஆனால் தனியார் துறைகளில் ஏற்படும் இந்த மாற்றம் மட்டும் போதாது, அரசு பணியிடங்களில் பாதுகாப்பை திருநர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை விஜியின் வாழ்க்கை.

பள்ளிப் பருவத்திலயே தன் பாலினத்தை பற்றி அறிந்த விஜி பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ போகக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார். மற்ற குடும்பங்களை போல் அல்லாமல் விஜியின் குடும்பம் அவரை எப்படியாவது கல்வி கற்க வைத்துவிட வேண்டும் என்று துணை நின்றிருக்கிறது. குடும்பத்தின் துணையோடு அடையாளத்தை மறைத்து ஹோட்டல் மேனேஜ்மண்ட் படித்திருக்கிறார். அடையாளத்தை மறைத்து ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால் காலப்போக்கில் ஓட்டல் பணியாளர்களுக்கு இவரது அடையாளம் தெரியவர, இவரை கடுமையான பாலியல் வன்முறைக்கு  ஆளாக்கியிருக்கிறார்கள். சித்திரவதை தாங்க முடியாமல் வேலையைவிட்டு நின்றுவிட்டார் விஜி. பிறகு சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை வந்ததும் அவர் சென்றதும் கடைத்தொழிலுக்கு தான்.

எந்த வேலைக்கு செல்லக் கூடாது என தன் அடையாளங்களை, உணர்வுகளை எல்லாம் சட்டை பொத்தானுக்கு பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு, மனப் புழுக்கத்துடன் படித்து முடித்தாரோ, அந்த படிப்புக்கான அங்கீகாரத்தை இந்த சமூகம் கொடுக்கவில்லை அவருக்கு. ஒன்றரை ஆண்டுகள் கடைத்தொழிலுக்கு போனவர், கொரோனா பெருந்தோற்றின் போது கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம்  மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர் பணிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் வீடுவீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்கும் பணிக்கு சென்றார். பிறகு அங்குள்ள அதிகாரி ஒருவருக்கு இவர் பட்டயப் படிப்பு முடித்தவர் என்பது தெரியவர, விஜியை வார்டு மேற்பார்வையாளராக பணி நியமனம் செய்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது வார்டு சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

விஜியின் வாழ்க்கைக்கு நேர் எதிராக இருக்கிறது சுதாவின் வாழ்க்கை. தமிழ்நாடு அரசின் திருநங்கைகளுக்கான கொள்கை வரைவுக்குழுவில் இடம் பெற்றிருக்கும் சுதா, லோக் அதாலத் உறுப்பினர்.  கலைமாமணி விருது பெற்றவர். பில்கேட்ஸ் பவுண்டேசனில் பணியாற்றிய அனுபவத்தோடு பல வெளிநாட்டு பயணங்கள் செய்த அனுபவமும் உள்ளவர். LGBTQIA+ சமூகத்தினருக்கு சேவைகள் செய்ததற்காக பல விருதுகள், அங்கீகாரங்கள் பெற்றிருந்தாலும் தன் பாலின அடையாளத்தின் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனது குறித்த வருத்தம் அவருக்கு இன்றும் இருக்கிறது. திருநர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சுதா தொடர்ந்த வழக்கில் திருர்களுக்கு கிடைமட்ட இட ஒதுக்கீடு (horizontal reservation) வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திருநர்களுக்கு உயர்கல்வி வழங்குவதோடு ஒரு சதவீத தனி இடஒதுக்கீட்டையும் அரசு வழங்க வேண்டும் என்பது சுதாவின் கோரிக்கையாக இருக்கிறது.

திருநங்கை சுதாவுக்கு பாலின அடையாளங்கள் மட்டும் பிரச்னையாக இல்லை. சாதியும் பிரச்னையாகவே  இருந்திருக்கிறது. ''நம் சாதியில் இப்படி எல்லாம் இருக்கமாட்டார்கள்'' என்பதே சுதாவின் குடும்பம் மற்றும் உறவினர்களின் கருத்தாக இருந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்களோ அவர்கள் கண் முன்னே தனியாளாக போராடி இன்று பல சாதனைகளை புரிந்த பிறகே குடும்பத்தினர் தன்னை ஏற்றுக்கொண்டதை கூறுகிறார் சுதா.  சாதனைகள் பல புரிந்தாலும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பிறகும் பாலின அடையாளத்தால் கல்வி கனவு பறிபோன கவலை மட்டும் சுதாவிற்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது….

உலக நாடுகளில் LGBTQIA+ சமூகத்தினர் உயர் கல்வி கற்க உள்ள கொள்கைகள்
உயர்கல்வி நிறுவனங்களில் பாலின பேதமற்ற பொதுவான சீருடை, அனைத்து பாலினத்தவருக்கும் பொதுவான கழிப்பறைகள், LGBTQIA+  சமூகத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிரான கொள்கைகள், பாலின பாகுபாடுகளற்ற கல்வி வளாகங்கள் அமைய ஐக்கிய நாடுகள் சபை 2010-ம் ஆண்டு இயற்றப்பட்ட சமத்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

மேலே குறிப்பிட்ட அனைத்து விதிகளோடு பெயர் மற்றும் பெயர் விகுதிகளை விருப்பப்படி அடையாளப்படுத்துதல், விளையாட்டில் அவரவர் பாலின அடையாளத்தோடே பங்கேற்க வழிவகை செய்தல் என  அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் கொள்கை வரையறை வகுத்து அதனை பின்பற்றுகின்றன. திருநங்கைகளுக்கு என்று பிரத்யேக கல்வி நிறுவனங்கள்  அமைக்கவும் அமெரிக்க உயர்கல்வித்துறை பரிந்துரைகள் வழங்கியுள்ளன.

''ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United kingdom) பாலியல் கல்வியை வயதுக்கு ஏற்ப பல்வேறு கட்டங்களில் பள்ளி பாடப்புத்தகத்திலயே வழங்குகிறார்கள். பாலினரீதியாக தங்களை அடையாளங் கண்டு கொள்பவர்களுக்கு அரசுகள் வழங்கும் உதவிகள், திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் சமூகத்தில் அனைத்துப் பாலின அடையாளங்களையும் உள்ளடக்கிய பார்வை வேண்டும். அந்த பார்வை கல்வியின் மூலம் மட்டுமே கிடைக்கும். திருநர்கள் பொருளாதாரரீதியாக பின்தங்கியவராக மட்டுமே இருப்பார்கள் என்று இல்லை.

ஓரளவுக்கு நல்ல பொருளாதார சூழல் இருந்தாலும் சமூகத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தான் கடினமானதாக இருக்கிறது. எனவே பாடத்திட்டத்தில் ஒரு புரிதலை ஏற்படுத்தினால்தான் அனைத்து பாலினத்தவரையும் ஏற்றுக் கொள்ளும் புரிதல் சமூக அளவில் ஏற்படும். இந்தியாவில் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் திருநர்களை அங்கீகரிக்கும் விதமாக கல்விக்கொள்கை பள்ளி அளவிலயே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் விழிப்புணர்வு அதிகம் ஏற்படவில்லை. LGBTQIA+ மக்கள் குறித்த புரிதல் அதிகம் உள்ள நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் கூட அனைத்து மாகாணங்களிலும் இது குறித்து வெளிப்படையாக பேச முடியாது.

சில மாகாணங்களில் குழந்தைகள் அளவில் இது தேவையற்றது என்று பேசுவதற்கு தடை உள்ளது. ஆனால் 16% பேர் தங்களை பாலினரீதியாக அடையாளங் கொள்வதில் குழப்பத்துடன் இருப்பதாக 2022-ல் எடுத்த ஆய்வு ஒன்று கூறுகிறது. அதன்பிறகு அங்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டு வயதுக்கு தகுந்த பாலின அடையாளங்கள் குறித்து கல்வியில் இணைத்துள்ளார்கள். இந்தியாவில் உயர் கல்வியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் கூட இன்னும் ஆண், பெண் மட்டுமே உள்ளது.

திருநர்கள் என அடையாளப்படுத்த விண்ணப்பங்களிலே வாய்ப்பில்லை. இந்த நிலை மாற வேண்டும்'' என்கிறார் தமிழ்நாடு தொடங்கி சர்வதேச அளவில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி ஆலோசகராக இருக்கும் முனைவர் மாலதி.

''பாலின சமத்துவ சமூகம் என்பது பாலினம் என்ற அடையாளத்தை முன்னிருத்தாத ஒன்றாக இருக்கும். அங்கு எல்லோரும் அவர்களாகவே இருப்பார்கள்'' என்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் குளோரியா ஸ்டெயினம். இந்நிலை உருவாகும் வரை இந்த கதைகள், உரிமைக்குரல்கள் ஓயப்போவதில்லை.

குறிப்பு : Google News Initiatives உதவியுடன் The News Minute மற்றும் Queer Chennai chronicles இணைந்து நடத்திய Inqlusive Newsroom Media Fellowship கீழ் எழுதப்பட்ட கட்டுரை.

Tags :
Advertisement