முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு... ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக் குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக சிறைச்சாலையில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படும் போது, அவருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவருக்கு சிறியதாக ஒரு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று
மதியம் சுமார் 4 மணியளவில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜி, திடீரென ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. வெளியான தகவல்களின்படி, இன்று மதியம் உணவு சாப்பிட்ட பிறகு செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.