12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி, தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோர், சேலம் ஆட்சியராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் ஆட்சியராக கற்பகராஜ், வேலுர் ஆட்சியராக சுப்புலட்சுமி, செங்கல்பட்டு ஆட்சியராக அருண்ராஜ் என 6 மாவட்டங்களின் ஆட்சியர் பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மாவட்டங்களின் ஆட்சியராக இருந்தவர்கள் இதர இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் ஆட்சியராக இருந்த குமரவேல் பாண்டியன் தோட்டக்கலைத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் https://t.co/WciCN2SiwX | #IAS | #Transfer | #TamilNadu | #shivdasmeena | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/372VON61Lk
— News7 Tamil (@news7tamil) January 28, 2024
தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன், உயர்கல்வித்துறை துணைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்த நடராஜன், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வருவாய் நிர்வாக முதன்மையச் செயலராக இருந்த பிரகாஷ் வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.