பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?
ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என உணர்ந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்விலும் முறைகேடு புகார்கள் எழுந்தது. கடந்த 2022-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ளன.
இவர் புனே மாவட்டத்தில் பணியாற்றிய போது தனது சொந்த வாகனத்தில் அரசு ஊழியருக்கான அடையாள பலகை வைத்தது, சைரன் பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், ஐஏஎஸ் தேர்விலும் சலுகைகளை பெற தனது குடும்ப வருமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. தனது பதவியைத் தவறுதலாகப் பயன்படுத்திய புகாரில், அவர் பதவி நீக்கம் செய்தது. மேலும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, அவரின் தேர்ச்சியை, யுபிஎஸ்சி ரத்து செய்தது. எதிர்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பூஜா இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என உணர்ந்து பூஜா வெளிநாடு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.