பயணிகள் கவனத்திற்கு… #Chennai கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை ரத்து!
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது.
இதற்கிடையே, பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களுக்கான அவ்வப்போது ரயில் சேவையில் மாற்றம் அல்லது ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், நாளையும் மின்சார ரயில் சேவை ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு மாறாக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மக்கள் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.