பீகாரில் #TrainAccident - ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!
பீகார் மாநிலத்தில் விரைவு ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது இரண்டாக பிரிந்ததால் விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லியிலிருந்து மேற்வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் என்கிற விரைவு ரயில் இன்று ( ஞாயிற்றுக் கிழமை) சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 11.08 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென அதன் பெட்டிகளின் இணைப்பு திடீரென உடைந்து இரண்டாக பிரிந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கிழக்கு மத்திய ரயில்வேயின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..
புதுடெல்லியிலிருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்தது. ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் இடையே கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எஞ்சினிலிருந்து 13வது பெட்டி எண் S-7 மற்றும் என்ஜினில் இருந்து 14வது பெட்டி எண் S-6 ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு உடைந்து பிரிந்தது. மீட்புக் குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர் ” என தெரிவித்தார்.
இந்த ரயில் விபத்து தொடர்பாக சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தினார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.