கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்தானது, கேட் கீப்பரின் கவன குறைவால் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்துள்ளார். பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின்போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.